திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது மரவபாளையம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் பொது குடிநீர் குழாயில்பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீருடன் சாரைப்பாம்பு வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அதே குழாயில் இருந்து தவளையின் சிதறிய உடல் பாகங்களும் வந்தன.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பும், இதேபோல குடிநீர் குழாயில் இருந்து தவளையின் சிதறிய உடல் பாகங்கள் வெளியே வந்தன. கடும் துர்நாற்றத்துடனான குடிநீரை பிடிக்காமல் திரும்பிவிட்டோம். இதேபோல சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் தொட்டியை பராமரிக்காமல் இருப்பதும், பாதுகாப்பாக இல்லாததுமே முக்கிய காரணம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.