மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கி ஒப்பந்தப்புள்ளி பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், கனிமவளத் துறையின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. எனவே, சுற்றுலா வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கருகாத்தம்மன் கோயில் எதிரே 6.79 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க, கடந்த 1992-ம் ஆண்டு புதுநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் வழங்கியது. நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு பணிகளால் திட்டப்பணிகள் தாமதமானது. கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தின்போது மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுநகர் வளர்ச்சிக் குழுமம், மத்திய பொதுப்பணித் துறை மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி, ஈசிஆர் சாலையில் வரும் வாகனங்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு 2 பாதைகளும், மாமல்லபுரம் நகரத்தில் இருந்து வரும் வாகனங்களுக்காக 2 பாதைகளும் அமைக்கப்படுகின்றன.
மேலும் கழிப்பறைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பயணிகளுக்கான ஓய்வறைகள், உள்ளூர் வாகனங்களை நிறுத்துவதற்காக இடவசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன், 50 பேருந்துகளை நிறுத்தி இயக்கும் வகையில் நிழற்குடைகளுடன் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.
பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எனவே, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பேருந்து நிலையம் அமையவுள்ள இடம் பள்ளமாக உள்ளதால் மண்கொட்டி உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மண் எடுக்கும் பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு கனிமவளத் துறை மூலம் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கோரப்பட்டது.
அதன் பிறகு மாவட்டம் பிரிக்கப்பட்டு, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இப்பகுதி வருவதால், செங்கை ஆட்சியரின் ஒப்புதல் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு, புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் கூறும்போது, ``மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு சென்று, விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றனர்.