தமிழகம்

10, பிளஸ் 2 வகுப்புகள் நாளை தொடக்கம்: பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

ஜன.19-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் வரும் 19-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு தயாராக வைத்திருக்கும்படி அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களை போதிய இடைவெளியில் அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர், முகக் கவசம், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் கருவி, சிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT