தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர் பா.ஜோதி நிர்மலா சாமி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 53,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி அன்றைய தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவைகள் ஆய்வு செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பா.ஜோதி நிர்மலா சாமி இன்று ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரான, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஜோதி நிர்மலா சாமி பேசியதாவது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைத்தலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021-க்கான புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், பதிவுகளின் திருத்தம் செய்தல், ஓரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஆண்டு நவ. 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றன. வரும் 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் தொடர்பாக 54,211 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 53,225 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1026 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பெயர் நீக்கம் செய்தல் தொடர்பாக 16,636 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 15,840 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 794 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திருத்தம் செய்ய 9,576 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 8,409 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1173 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய அளிக்கப்பட்ட 5,578 மனுக்களில் 5,157 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 421 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேசிய வாக்களாளர் தினமான ஜனவரி 25 அன்று புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்பிரியா (திருச்செந்தூர்), தேர்தல் வட்டாட்சியர் ரகு மற்றும் வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.