தனஞ்செயன் 
தமிழகம்

‘வெஞ்சுரி எெலக்ட்ரிக் கார்’ திட்டம்: சிவகங்கை மாணவருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் சிவகங்கை பள்ளி மாணவரின் ‘வெஞ்சுரி எலக்ட்ரிக் கார்’ ஆய்வுத் திட்டம் முதலிடம் பெற்றது. இளம் விஞ்ஞானிகளைக் கண்டறியும் விதமாக ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்க மாநாடு நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை, தேசிய அறிவியல் பரிமாற்றக் குழுமம் சார்பில், தமிழகத்தில் மாவட்ட, மாநில மாநாடுகள் நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு, சமீபத்தில் ஆன்லைனில் நடந்தது. இதில் சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜீ மேனிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் தனஞ்செயனின் ‘வெஞ்சுரி எலக்ட்ரிக் கார்’ ஆய்வுத் திட்டம் முதலிடம் பெற்றது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது

இதுகுறித்து தனஞ்செயன் கூறியதாவது:

தற்போதையை சூழலில் வாகனங்களை மாசு இல்லாமல் இயக்க மாற்று வகை மற்றும் புதுமையான தொழில்நுட்பம் அவசியம். அத்தகைய சிறந்த தொழில்நுட்பத்தில் தான் மின்சார கார் தயாரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசு அடையாமல் ஓசோன் படலம், சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. அறிவியல் மாநாட்டில் நான் சமர்ப்பித்த ‘வெஞ்சுரி எலெக்ட்ரிக் கார்’ ஆய்வுத் திட்டத்தில் ‘வென்டூரி சிஸ்டம்’ எனும் சிறிய குழாய்களில் இருந்து நீரின் ஓட்டத்தை அதிகரிக்கும் தத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளேன்.

இந்த எலெக்ட்ரிக் கார் சூரியசக்தி, காற்று, அழுத்தம் ஆகியவை மூலம் செயல்படும். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த வாயுவையும் உருவாக்காது. எரிபொருள் பயன்பாடும் இருக்காது, என்று கூறினார். அவரை பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயன் பாராட்டினார்.

SCROLL FOR NEXT