காரைக்குடி 1928-ம் ஆண்டு நகராட்சியானது. அப்போது வடக்கே கழனிவாசலும், தெற்கே செஞ்சையும், மையத்தில் கல்லுக்கட்டி பகுதியும் இருந்தன. கல்லுக்கட்டி பகுதியில் உள்ள கொப்புடைய நாயகி அம்மன் கோயில் முன்பாக பழமையான மணிக்கூண்டு உள்ளது.
கடந்த 1938-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மணிக் கூண்டு 82 ஆண்டுகளாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதன் உயரம் 50 முதல் 60 அடி வரை இருக்கும். அக்காலத்தில் காரைக்குடியின் அடை யாளச் சின்னமாக (லேண்ட் மார்க்) இருந்துள்ளது. இதில் நேரத்தின் அருமையை உணர்த்த ‘காலம் போற்று’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் ஒவ்வொரு மணி நேரமும் ஒலி எழுப்பும்.
இது நகர் முழுவதும் கேட்கும். மணிக்கூண்டின் மேலே சென்றுவர படிக்கட்டுகளும் உள்ளன. இந்த மணிக்கூண்டை காரைக்குடி வைர வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்ற ரத்தினவேல் என்பவர் ‘திவான் பகதூர்’ பட்டம் பெற்ற தனது தந்தை சுப்பையா நினைவாகக் கட்டியுள்ளார். அதே ஆண்டில் அந்த மணிக்கூண்டை நகராட்சியிடம் ஒப்படைத் துள்ளார். நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த இந்த மணிக்கூண்டு தற்போது பராமரிப்பின்றி உள்ளது. தொழில் வணிகக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, மணிகூண்டைப் புனரமைக்க ரூ.3 லட்சம் ஒதுக்கியுள்ளார்.
இதுகுறித்து ரத்தினவேல் மகன் முருகேசன் கூறியதாவது:
எங்களது குடும்பம் பல தலைமுறையாக வைர வியாபாரம் செய்து வருகிறது. ஒருமுறை மதுரை சென்ற இடத்தில் எனது தாத்தா சுப்பையா இறந்துவிட்டார். அவர் மீது அதிக பாசம் வைத்திருந்த எனது தந்தை ரத்தினவேல் மணிக்கூண்டைக் கட்டினார். நேரத்தின் அருமையை உணர்த்தவே மணிக்கூண்டை கட்டினார். கடிகாரத்தின் ஒலியை வைத்தே காரைக்குடி மக்கள் தங்களது பணிகளைச் செய்வர், என்று பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.