வயல்களில் புழு, பூச்சிகளை உண்ண வரும் கொக்குகள் நடப்பட்ட இளம் நெல் நாற்றுக்களின் மீது நிற்பதால் வளர்ச்சி பாதிக்கிறது. எனவே வெள்ளைத் துணிகளை பறக்கவிட்டு எளிய முறையில் கொக்குகளிடம் இருந்து விவசாயிகள் நாற்றுக்களை தற்காத்து வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளை யம், சின்னமனூர் பகுதியில் இரண்டு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலம் நெல் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்டு மாதம் இப்பகுதியில் முதல் போக விவசாயம் துவங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை முடிந்துள்ளது. தற்போது நிலத்தைப் பண்படுத்தி அடுத்தகட்ட சாகுபடிக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.குளம், ஆழ்குழாய் உள்ளிட்டவற்றில் பெறப்படும் நீர் மூலம் நாற்றாங்கால் அமைத்து வயல்களில் நாற்று நடும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்நாற்றுக்கள் நட்டு வேர்பிடித்து நிமிர்ந்து வளர 2 வாரங்களாகும். ஆனால் வயல்களில் உள்ள புழு, பூச்சியை உண்பதற்காக கொக்குகள் இப்பகுதிக்கு அதிகம் வருகின்றன. கொக்குகள் வயல்களில் உள்ள நாற்றுக்களின் மீது நிற்கும்போது நாற்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாற்றுகள் சேற்றுக்குள் மூழ்குவதுடன், பக்கவாட்டிலும் சாய்ந்து விடுகிறது. இதனால் சீரற்ற வளர்ச்சியாக அமைந்து விடுகிறது.
எனவே கொக்குகளை விரட்ட வெள்ளை நிற துணி, சாக்கு போன்றவற்றை குச்சிகளில் நட்டு கொக்கு வருவதை விவசாயிகள் தடுத்து வருகின்றனர். காற்றின் வீச்சினால் இதன் அசைவுகளைக் கண்டு கொக்குகள் சம்பந் தப்பட்ட வயல்களுக்கு வருவதில்லை. எளிய, செலவில்லாத தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள் இளம் நாற்றுக்களை தற்காத்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது முதல்போக அறுவடை, இரண்டாம்போக விவசாயம், வயல் பண்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்களால் கொக்கு உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு அதிகளவில் கிடைக்கிறது. வயல்களில் நடப்பட்ட புதிய நாற்றுக்களின் மேல் நின்று அழுத்தி விடுகிறது. எனவே வெள்ளைச் சாக்குகளை கொடிபோல பறக்க வைத்து தற்காத்து வருகிறோம் என்றனர்.