குரங்கணியில் வில்போன் சிக்னலுக்காக தெருவில் நின்று பேசும் காட்சி. 
தமிழகம்

குரங்கணியில் தொடரும் தொலைத்தொடர்பு பிரச்சினை: சிக்னலைத் தேடி வில்போன்களுடன் அலையும் மக்கள்

என்.கணேஷ்ராஜ்

போடி அருகே குரங்கணியில் உயரமான மலைகள், பனி போன்றவற்றினால் தொலைதொடர்பு சிக்னல் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே அவசர தகவலுக் காக வில்போன்களை எடுத்துக்கொண்டு தெருக்களில் சிக்னலை தேடி அலையும் நிலை உள்ளது.தேனி வனக்கோட்டம் போடி வனச்சரகத்திற்கு உட்பட்டது குரங்கணி. போடியில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

சுமார் 10 கி.மீ. தூரம் மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு காப்பி, ஏலக்காய், மிளகு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைந்து வருகின்றன.சுமார் 200 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. அருவிகள், பசுமையான மலைப்பகுதி, குளிர் பருவநிலை, மலை ஏற்றம் போன்றவற்றிற்காக சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருவது வழக்கம். இங்கு தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன.

ஆனால் இங்கு தொலைத்தொடர்பு வசதி இல்லை. மலைப்பகுதி என்பதால் இங்கு டவர் அமைப்பதில் சிரமம் உள்ளது. எனவே சட்டம், ஒழுங்கு நடவடிக்கைக்காக இங்குள்ள காவல் நிலையத்திற்கு மட்டும் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களோ சுற்றுலாப் பயணிகளோ குரங்கணியில் மொபைலை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஒரே ஒரு தனியார் மொபைல் நிறுவன சிக்னல் மட்டும் மிக மிக குறைவான அளவில் கிடைக்கிறது. இதற்காக பலரும் வில்போன்கள் எனப்படும் கம்பியில்லா தரைவழி தொலைபேசி இணைப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் மேகமூட்டம், மழை போன்ற நேரங்களில் இந்த சமிக்ஞையும் கிடைப்பதில்லை. இதனால் வில்போனை கையில் எடுத்துக் கொண்டு வீதிகளின் ஒவ்வொரு பகுதிக்காக சென்று சிக்னல் கிடைக்கும் இடங்களில் நின்று ஓரளவிற்கு பேசி கொள்கின்றனர்.

இருப்பினும் அவசரம், மருத்துவம் உள்ளிட்ட நேரங்களில் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலையே உள்ளது. இதனால் உறவுகளின் அன்பு பரிமாறல்கள், வாழ்த்துகள் மற்றும் சமூக வலைதள பயன்பாடு இன்றி இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கூறுகையில், அவசரம் என்றால் போனை தூக்கிக் கொண்டு டாப்ஸ்டேஷன் வழித்தடத்தில் உள்ள 3-வது வளைவுக்குச் செல்வோம். அங்கு மட்டும் சிக்னல் ஓரளவு கிடைக்கும். இரவு, மழை போன்ற நேரங்களில் இதுபோன்று செல்ல முடியாது. காவல் நிலையத்தில் வைபை வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளனர். மற்றபடி கிராம மக்கள் இன்னமும் தொலைதொடர்பு இன்றிதான் வாழ்ந்து வருகிறோம். எனவே குரங்கணியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT