மேட்டூர் அணையில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்படும் முதலைகள் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வடவாறு, கான்சாகிப் வாய்க்கால், பழைய கொள்ளிடம், கொள்ளிடம் ஆறு, வடக்கு ராஜன் ஆகியவற்றில் தங்கி இனப்பெருக்கம் செய்து விடுகிறது. இதனால் இந்த ஆறுகளில் முதலைகள் பல்கி பெருகி உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதிகளில் முதலைகளால் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து வந்த இரு புயல்கள், தொடர் மழை காரணமாக பழைய கொள்ளிடம், வடவாறு, கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்டவைகளில் குடி கொண்டிருந்த முதலைகள் வெள்ள நீரோடு வெளியேறி அருகில் உள்ள வாய்க்கால்கள், குளம், குட்டைகளில் தஞ்சமடைந்துள்ளன. நீர் நிலைகளில் தற்போது தண்ணீர் குறைந்து வரும் நிலையில், அதில் இருக்கும் முதலைகள் வெயிலைத் தேடி வெளி வருகின்றன. ‘ஹாயாக வாக்கிங்’ வருவது போல கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் சி. கொத்தங்குடி, அண்ணா மலைநகர், வல்லம் படுகை, பழையநல்லூர், அகர நல்லூர்,வேளக்குடி, இளநங்கூர், சிவாயம், தவர்த்தாம்பட்டு, குமராட்சி, கோப்பாடி ஷெட்டர் பகுதி, அத்திப்பட்டு, எய்யலூர் மற்றும் சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட புதிய நகர்களைச் சேர்ந்தவர்கள் முதலை பீதியில் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள இரட்டை குளத்தில் இருந்து, ஒரு முதலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் வர, ஆட்டோ டிரைவர் ஒருவர் லாவகமாக அதை வலையால் பிடித்து, வனத்துறையினருக்கு தகவல் தர அவர்கள் வந்து பிடித்துச் சென்றனர்.
முதலைகள் பற்றி பொதுமக்கள் தகவல் அளித்தால், உடனே வனத்துறையினர் அவைகளைப் பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் விடுகிறார்கள். ஆனால், அங்கிருந்து முதலைகள் மீண்டும் வெளியேறி, ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. “இந்த பகுதி நீர்நிலைகளில் உள்ள முதலைகளைப் பிடித்து, பாதுகாப்பான ஒரு இடத்தில் முதலை பண்ணை அமைக்க வேண்டும். இதுவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு’‘ என்கின்றனர் இப்பகுதியின் சூழலை உணர்ந்த சூழியல் ஆய்வாளர்கள்.
மக்களும் இதை வலியுறுத்தி வருடங்கள் பல ஆகி விட்டன. சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் சட்டமன்றத்தில் பேசிய போது, இதை வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, இரு ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பில் நெய்வேலியில் முதலை பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணி அதோடு நிற்கிறது.மக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய இவ்விஷயத்தில், அவசர நடவடிக்கை எடுப்பது அவசியத் தேவை.