“உழைப்பவருக்கு அதிமுகவில் உரிய அங்கீகாரம் உண்டு. எந்த இடத்தில் இருந்து அவர்கள் தொடங்கினாலும், கட்சியில் தகுந்த பொறுப்புக்கு வருவார்கள்” முதல்வர் பழனிசாமி கட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து கூறி வரும் வார்த்தை இது. அந்த வார்த்தைக்கு ஒரு உதாரணம் விருத்தாசலம் சாந்தகுமார்.
இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையிலும் மனம் தளராமல் உழைப்பைக் கொண்டு மாதம் ரூ.70 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். கூடவே அதிமுகவில் இணைந்து அரசியலிலும் தடம் பதித்து வருகிறார். விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் வசிக்கும் சாந்தகுமார், பிளஸ் 2 வரை படித்து முடித்த நிலையில், வீட்டில் இருந்து வந்துள்ளார்.
பின்னர் சென்னையில் பணிபுரியும் தனது சகோதரரின் ஐ.டி நிறுவனத்தில் உணவகம் நடத்தும் தொழிலை செய்ய முன்வந்துள்ளார். அவரது மன உறுதியை கண்டு, நிறுவனமும் அவருக்கு வாய்ப்பளிக்க, வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய சாந்தகுமார் விருத்தாசலத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களையும் அங்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.
இதுதவிர அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசியும் பெற்றுள்ளார். சாந்தகுமாரை தோள்தட்டி பாராட்டி ஊக்குவித்திருக்கிறார் முதல்வர். விருத்தாசலத்தில் சாந்தகுமாரை நாம் சந்தித்தோம். “கால்சியம் குறைபாடு காரணமாக பிறவியிலேயே எனது உடல் வளர்ச்சி குறைந்து, கால்கள் செயலிழந்து விட்டன.
மற்றொருவரின் உதவியின்றி என்னால் செயல்பட முடியாது. விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள் உதவியுடன் தான் பள்ளிக்குச் சென்று வந்தேன். கல்லூரி படிப்புக்கு வழியின்றி, வீட்டிலேயே முடங்கிக் கிடந்த எனக்கு, என் அண்ணன் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினேன். அந்தத் தொழிலை நேர்த்தியாக நடத்தி வருவதன் மூலம் நிறுவனம் என் மீது வைத்திருந்த நம்பிக்கை காப்பாற்றியிருக்கிறேன். உணவகம் சிறப்பாக நடந்து வருகிறது.
அரசியலைப் பொறுத்தவரை, எங்கள் குடும்பம், அதிமுக அனுதாபி குடும்பம். கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இளைஞர்கள் பாசறை தொடங்கிய போது, அதன் செயலாளர் வெங்கடேஷ், பகுதி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக நேர்காணல் நடத்தினார். அப்போது, நானும் அதில் கலந்து கொண்டு, அவர்களின் கேள்விக்கு சரியான பதிலளித்தேன். அன்றே எனக்கு இளைஞர் பாசறையில் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதையடுத்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது, என்னைப் பாராட்டிய அவர், அமைச்சர் சம்பத்தின் பரிந்துரையின் பேரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இளைஞரணி பொறுப்பையும் வழங்கினார். கட்சியின் மாவட்ட அளவிலான புள்ளி விவரங்களை கணினியில் உள்ளீடு செய்யும் பணி வழங்கப்பட்டது. சிறப்பாக செய்து வருகிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்கிறேன்’‘ என்கிறார் சாந்தகுமார்.