என்எல்சி இந்தியா நிர்வாகத்தின் நிதியில் வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புல்வெளிப் பூங்கா. 
தமிழகம்

அமைச்சர் சம்பத் அப்படி செய்திருக்க கூடாது…

ந.முருகவேல்

வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் என்எல்சி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் புல்வெளி பூங்கா அமைத்து தர வேண்டி தொகுதி எம்எல்ஏ (குறிஞ்சிப்பாடி) என்ற முறையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் மூலமாக என்எல்சி நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார்.
ஆட்சியர் பரிந்துரையின் பேரில், என்எல்சி சமூகப் பொறுப்புணர்வுத் துறை, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சத்திய ஞானசபை வளாகத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அதனுள் புல்வெளிப் பூங்கா அமைத்தது.

இந்தப் புல்வெளிப் பூங்காவை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து, உலகப் பிரசித்தி பெற்ற சத்திய ஞானசபை வளாகத்தில் தியானம் செய்யும் வகையில் புல்வெளிப் பூங்கா அமைத்துக் கொடுத்த என்எல்சி நிர்வாகத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். வடலூர் சத்திய ஞானசபையை ஆன்மிக சுற்றுலா தலமாக்கவும், வடலூரை இறைச்சிக் கடைகள் இல்லா புனித நகராக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துச் சென்றார்.

திடீரென பூங்கா திறப்பது குறித்து, தகவலறிந்த தொகுதி எம்எல்ஏவான எம்ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், “இந்தப் பணிக்காக தொகுதி எம்எல்ஏ முயற்சி செய்த நிலையில், அவருக்கு கூட தகவல் தெரிவிக்காமல், சிறு துரும்பையும் எடுத்துப் போடாத அமைச்சர் எப்படி திறக்கலாம்?” என முதல்நாள் இரவே ஆவேசப்பட, அதை யறிந்த காவல் துறையினர் அவர்களை அழைத்து சமாதானம் செய்துள்ளனர்.

“நான் இதை செய்தேன் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும். விடுங்கப்பா” என்று எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்து சமாதானப்படுத்தியி ருக்கிறாராம். “இந்தப் பணியை செய்த என்எல்சி நிர்வாகத்துக்கும் தகவல் இல்லை, எங்கள் எம்எல்ஏவுக்கும் தகவல் இல்லை, விழாவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியரும் வரவில்லை.

ஏதோ அதிமுக விழா போல நடத்துகிறார்கள்’‘ என்று விடாது தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர் இப்பகுதி திமுகவினர். என்எல்சியில் சம்பந்தப்பட்ட அதிகா ரியை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘அப்படியா, திறந்து விட்டார்களா!’ என்று நம்மிடமே ஆச்சரியமாக கேட்டுக் கொண்டார். திமுகவினரின் ஆதங்கத்திலும், என்எல்சி அதிகாரியின் ஆச்சரியத்திலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

SCROLL FOR NEXT