எம்ஜிஆரின் 104-வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றுஅதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்குஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளான இன்று (ஜன. 17-ம் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவைஉறுப்பினர்கள், அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து,பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பங்கு பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் பிறந்த தினமான இன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆங்காங்கே அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைகள், அவரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கும், படங்களுக்கும் இன்று (ஜன.17-ம்தேதி) மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தென்சென்னை, வடக்கு, மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.