திருமழிசை துணை நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், திட்டப் பணிகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இல்லை. திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கினால்தான் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணிகள் வேகமெடுக்கும் என்று தெரிகிறது.
சென்னையில் மக்கள் அடர்த்தியைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் சென்னையில் இருந்து 30 கி.மீதொலைவில் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் 1,500 ஏக்கரில் துணை நகரம் அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1996–ம்ஆண்டு திட்டமிட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு திருமழிசை சாட்டிலைட் சிட்டி 311 ஏக்கரில் ரூ.2,160 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேரவை விதி110-ன்கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
திருமழிசையில் 311 ஏக்கரில்அமைக்கப்படவுள்ள துணைக்கோள் நகரத்தில், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் கால்வாய், தெருவிளக்குகள் வசதி, சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனைகள், பேருந்து நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்படும். மேலும், 12 ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் பயன்பெறும் வகையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக திருமழிசை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில்உள்ள குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், வெள்ளவேடு, பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக167 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், 70 ஏக்கர் வரை நிலம் தர மறுப்பு தெரிவித்த விவசாயிகள், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.
இதனிடையே, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரும் பணிகளைத் தொடங்கியது. "திருமழிசை துணைக்கோள் நகரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது" என்று 2015-ல் சட்டப்பேரவையில் அப்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்தார். “துணை நகரத்துக்காக 130 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.247 கோடி மதிப்பீட்டில் தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது” என்று 2016-ல் சட்டப்பேரவையில் அப்போதைய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போதைய துணை முதல்வரும், வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2019-ம்ஆண்டு செப்டம்பரில் துணை நகரம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இருப்பினும் இப்பணியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா பாதிப்பால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தைதற்காலிகமாக துணை நகரத்துக்கான இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது காய்கறி சந்தை மீண்டும் கோயம்பேடுக்கு சென்றுவிட்டதால், அப்பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள்நடைபெறவுள்ளன. துணைக்கோள் நகரத்தில் வீடுகள் கட்டுவதா, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதா, மனையாக விற்பனை செய்வதா என்று இன்னும் முடிவாகவில்லை. ஏனென்றால் துணை நகரம் அருகே தனியார் கட்டியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 4 ஆண்டுகளாக விற்கப்படாமல் இருக்கின்றன. அதனால்பெரியளவு முதலீட்டில் குடியிருப்புகள் கட்டுவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
இதனிடையே, மெட்ரோ ரெயில் 2-ம்கட்ட திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான விரிவான திட்டஅறிக்கை தயாரிப்புக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்று சென்னை மெட்ரோ ரயில்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் திருமழிசை வரை மேற்கொள்ளப்பட்டால் அங்கு குடியிருப்புகள் வாங்க மக்கள் முன்வருவார்கள். அதனால் திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்க மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.