பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கரியகோவில் அணை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது. இதனால், வசிஷ்ட நதி கரையோரக் கிராமங்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கரியகோவில் அணை 52.49 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் மழை காரணமாககரியகோவில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று அணையின் நீர் மட்டம் 51 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 242 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முழுக்கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, அணையை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் உள்ளிட்ட வசிஷ்ட நதிக்கரையோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரங்களைச் சேர்ந்த மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என் எச்சரிக்கப்பட்டுள்ளது.