கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது. அதே நேரம் பேச்சிப்பாறையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குமரியில் கடந்த ஒரு வாரமாகப் பெய்த தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளங்கள், அணைகள் நிரம்பின. நீர்ப்பிடிப்புப் பகுதியான பாலமோரில் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக கோதையாறு நீர்மின் நிலைய அலகு இரண்டில் இருந்து 3 ஆயிரம் கன அடிக்கு மேல் வெளியான தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு வந்தது.
இதனால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46.20 அடியாக உயர்ந்தது. இதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், உபரியாகவும் 3 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது. இதனால் பரளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திற்பரப்பு அருவில் தண்ணீர் ஆக்ரோஷமாகக் கொட்டியது.
இந்நிலையில் நேற்று முதல் குமரியில் மழை நின்று வெயில் அடித்து வருகிறது. இதனால் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து வந்த வெள்ள அபாய நிலை நீங்கியுள்ளது. அதேநேரம் அணையின் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பொறியாளர்கள் அணை, மற்றும் கரையோரப் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர். அணையில் இருந்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,759 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் 732 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரியாக 810 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 720 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 153 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.