தமிழக பண்பாட்டை, கலாச்சாரத்தை தமிழக அரசு நிலை நிறுத்துகிறது என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்து முதல்வர் பேசினார்.
உலகப் புகழ்பெற்ற 3 ஜல்லிக்கட்டுகளில் பிரதான ஜல்லிக்கட்டான அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. முதல்வர் பழனிசாமி இன்று அதை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசியதாவது:
“உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்த மண் அனைவராலும் பாராட்டப்படக்கூடிய மண்ணாகும். இந்த மண்ணிலே பிறந்த அத்தனை இளஞ்சிங்கங்களும், சீறி வருகின்ற காளைகளை பிடித்து அடக்குவதற்கான பக்குவத்தோடு இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு சீறி வருகின்ற காளைகளை அடக்குகின்ற இளைஞர்கள் பட்டாளம் நிறைந்த இந்த ஜல்லிக்கட்டு விழா உலகப் புகழ்பெற்ற விழா என்று சொன்னால் அது மிகையாகாது.
உலக மக்கள் அனைவரும் காணக்கூடிய இந்த வீர விளையாட்டை, நம்முடைய கலாச்சார பண்பாட்டை, பாரம்பரியம் மிக்க பண்பாட்டைக் காக்கக் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டை, தமிழக அரசுதான் நிலைநிறுத்துகிறது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த வீர விளையாட்டில் கலந்து கொண்டிருக்கிற அனைத்து இளைஞர் பெருமக்களுக்கும், அதோடு, வீரமிக்க காளைகளை வளர்த்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வருகை தந்திருக்கின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி”.
இவ்வாறு முதல்வர் பேசினார்.