‘தமிழகத்திலும் தாமரை மலரும். மற்ற மாநிலங்களைப்போல தமிழ் மண்ணையும் மாற்றுவோம்’ என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
‘துக்ளக்' வார இதழின் 51-வது ஆண்டு விழா அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:
தமிழகம் மிக உயர்ந்த கலாச்சாரம், நாகரிகம் கொண்ட மாநிலம்.தமிழ் மிக பழமையான உயர்ந்தமொழி. ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் வாழ்ந்த புனிதமான தமிழகம் வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்திய மக்கள் அனைவரின் நலனையும் கருத்தில்கொண்டு மிகச் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் மூலம் 40 கோடிக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளனர். கரோனா ஊரடங்கின்போது ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,500 வரவு வைக்கப்பட்டது.
பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ஏழைகள், நடுத்தர மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உலக சுகாதாரநிறுவனமும், உலக நாடுகளும் பாராட்டுகின்றன. மேக் இந்தியா திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம்,விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் என மோடி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.
மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவில் கரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தொழில் துறையினருக்கு உதவ மத்திய அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.மோடி அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் கரோனா நெருக்கடி காலத்தில் நடந்த பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல், ராஜஸ்தான், கோவா, ஜம்மு - காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜகவின் தாமரை மலரும். தமிழகத்தில் மோடிக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருக்கிறது. தமிழ் மண்ணையும் மாற்ற விரும்புகிறோம்.
இவ்வாறு நட்டா பேசினார்.
ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தநட்டாவுக்கு விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றனர்.
வேட்டி, சட்டையில் நட்டா
விமான நிலையத்தில் இருந்து திறந்த வேனில் புறப்பட்ட நட்டா, சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மதுரவாயலில் நடந்த பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை,துண்டு அணிந்து பங்கேற்றார். பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.
நட்டாவுக்கு வெள்ளி வேலை எல்.முருகன் பரிசளித்தார். அப்போது, ‘வெற்றிவேல், வீரவேல்’ என்று தமிழில் முழக்கமிட்ட நட்டா,‘‘தமிழகத்தின் வளர்ச்சியில் பிரதமர்மோடி தனிக் கவனம் செலுத்தி வருகிறார். நிர்வாகிகள், தொண்டர்கள் உழைப்பை, அர்ப்பணிப்பை பார்க்கும்போது, வரும் தேர்தலில் பாஜகமுக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார்.