பொங்கல் பண்டிகையை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள தனதுசொந்த கிராமத்துக்கு வந்திருந்த முதல்வர் பழனிசாமி, கிராம மக்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
முதல்வர் பழனிசாமி, பொங்கல் பண்டிகை நாளில் (14-ம் தேதி) சேலம் வந்தார். எடப்பாடியை அடுத்துள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். பின்னர் தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கிருந்த பசுக்களுக்கு பழங்களைக் கொடுத்தார். மேலும், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
அதன் பின்னர், எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி கிராமத்துக்கு உட்பட்ட சப்பாணிப்பட்டி அருந்ததியர் காலனிக்குச் சென்ற முதல்வர் பழனிசாமி, அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
மேலும், அங்குள்ள மாரியம்மன் கோயில் பூஜையிலும் அவர்கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தார். கூடியிருந்த மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அப்பகுதி மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முதல்வர் பழனிசாமியுடன் அங்கிருந்த குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முதல்வர் பழனிசாமி தங்களுடன் இணைந்து, பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு சப்பாணிப்பட்டி அருந்ததியர் காலனி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.