தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பரவலான மழை: சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்வதுடன், கடும் பனி மூட்டம் நீடிக்கிறது. குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் இடைவிடாது சாரல் மழை பொழிகிறது. பருவம்தவறிப் பெய்யும் இந்த மழையால்அணைகள் ஓரளவுக்கு நிரம்பினாலும், தேயிலை மற்றும் மலை காய்கறிப் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த இரு நாட்களாகமழை மேலும் தீவிரமடைந்திருப்பதால், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் பகுதிகளில் கனமழையால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதுடன், ராட்சத பாறைகளும் சரிந்து, சாலையில் விழுந்தன. இதனால்அப்பகுதியில் போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள 8 கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். நெடுஞ்சாலை, மின்சாரம், வனம், காவல் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘மழை தொடர்ந்து பெய்தாலும், மழையின் அளவு குறைவாகவே உள்ளது. மழை பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்க மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன’’ என்றனர். நேற்று காலை 8மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குன்னூர் 40.5, கோடநாடு 36, கீழ் கோத்தகிரி 31, அவலாஞ்சி 27, கேத்தி 26, கோத்தகிரி 25.5, உதகை 20, எமரால்டு 17, கெத்தை 15.

SCROLL FOR NEXT