பெரும்பாலான நீர் நிலைகளும், விவசாயக் கிணறுகளும் நிரம்பியதால், விவசாயிகள் மாட்டுப் பொங்கலை வெகு உற்சாகமாக கொண்டாடினர்.
நடப்பாண்டு தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவமழை ஆகியவை நன்கு பெய்துள்ளது. குறிப்பாக, மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழையின்றி நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழே இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு பெய்த கனமழையால், ஆறுகள், ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து, ஏரிகள் நிரம்பின. இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
சேலம் குரங்குச்சாவடி மற்றும் கன்னங்குறிச்சி சந்தைகளில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தேவையான செங்கரும்பு, மஞ்சள் கொத்து, மாலைகள், மாடுகளுக்கான சலங்கைகள், கயிறுகள், கொம்புகளுக்கான வர்ணம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.
மாவட்டத்தின் மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தையான தலைவாசல் மார்க்கெட்டில், நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செங்கரும்பு கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனையான நிலையிலும், விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஓடைகள், ஏரிகள் உள்ளிட்டவற்றில் விவசாயிகள் கால்நடைகளைக் குளிப்பாட்டி, அவற்றின் உடலில் வர்ணப் பொடிகளை பூசியும், கொம்புகளுக்கு வர்ணம் தடவி, மூக்கணாங்கயிறு உள்ளிட்டவற்றை புதிதாக அணிவித்து, பொங்கலிட்டு, பூஜை நடத்தி கால்நடைகளை வணங்கி, அவற்றுக்கு மரியாதை செய்தனர். பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக நீர் நிலைகள் நிரம்பும் அளவுக்கும், விவசாய கிணறுகளில் நீர் மvட்டம் உயரும் அளவுக்கும் மழை பெய்யவில்லை. நடப்பாண்டு, பொங்கல் வரையிலும் நன்கு மழை பெய்துள்ளது. இதனால், நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. கிணறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்துவிட்டது. எனவே, பொங்கலை உற்சாகமாகக் கொண் டாடி, வருங்காலம் நன்மையாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டோம்’ என்றனர்.