பொங்கல் விடுமுறையை கொண்டாட கோபியை அடுத்த கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், எதிர்பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்தில் இருந்து ஏக்கத்துடன் அருவியைப் பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் 
தமிழகம்

கொடிவேரியில் குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கரோனா பரவலைத் தடுக்க கொடிவேரியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விவசாயப் பணிக்காக பயன்படுத்தும் மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, சலங்கைகள், வண்ணப் பட்டைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டன. கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றைப் படைத்து, மாட்டுப் பொங்கல் வைத்த விவசாயிகள், அதனை மாடுகளுக்கு வழங்கினர்.

இதேபோல், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களில் வாகனங்களில் பயன்படுத்தும் மாடுகளை கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு கொண்டு சென்று குளிக்க வைத்தனர். கொம்புகளை சீவி சுத்தப்படுத்தியும், நகங்களை வெட்டியும், உடல் பாகங்களில் வண்ணங்களைப் பூசியும் அழகு படுத்தி, மாட்டுப்பொங்கல் பூஜைசெய்தனர். மாட்டுப்பொங்கலை யொட்டி தாம்பு கயிறு, மூக்கணாங்கயிறு, கழுத்தில் மட்டும் கயிறு, கழுத்தில் மாட்டும் சலங்கை தலை கயிறு, திருஷ்டிக்கான கருப்பு கயிறு, ஒற்றை மணி சலங்கை விற்பனை அதிகரித்தது.

கோ சாலையில் பூஜை

ஈரோடு சாவடிப்பாளையத்தில் செயல்படும் கோ சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை மீறி இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடுகள் மீட்கப்பட்டு, இக்கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உபயதாரர்கள் உதவியுடன் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாட்டுச்சாணம் மூலம் பஞ்சகாவியம், இயற்கை உரம், சாம்பிராணி, தயாரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலையடுத்து ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. இப்பூஜையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

ஆண்டுதோறும் பொங்கலின்போது கொடிவேரி, பவானிசாகர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொடிவேரியில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்ததால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கொடிவேரி அணையின் எதிர்பகுதியில் உள்ள உயர்மட்டப் பாலத்தில் இருந்து கொடிவேரி அணையை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதேபோல், பவானிசாகர் பூங்காவிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில், கோட்டை பெருமாள் கோயில் பவானி சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

SCROLL FOR NEXT