ஒப்பந்தப் பணிகளில் மதிப்புக் கூட்டு வரியை (வாட்) பிடித்தம் செய்து வணிக வரி அலுவலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், பிடித்தம் செய்யப் பட வேண்டிய வரித் தொகையுடன் 150 சதவீத தண்டமும் செலுத்த நேரிடும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006, பிரிவு 13-ன்படி கட்டிடக் கட்டுமானம் மற்றும் கட்டிடப் பராமரிப்புப் பணிகளுக்கு 2 சதவீத வரியும், கட்டிடக் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் அல்லாத இதர பணிகளுக்கு 5 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. பணி வழங்குகின்ற தனி நபரோ அல்லது நிறுவனமோ ஒப்பந்த பணிதாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும்போது வரி பிடித்தம் செய்து அதற்கு அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் வணிக வரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
கட்டுமானப் பணிகள் என்பது புதிய கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவற்றை நிறுவு தல் மற்றும் பராமரித்தலைக் குறிக்கும். கட்டிட உள் கட்டமைப்பு களை மேம்படுத்துதல், மின்சாரம் சார்ந்த பணிகள், இயந்திரங்கள் போன்றவற்றைப் பராமரித்தல் ஆகியன கட்டுமானப் பணிகள் அல்லாத பணிகள் ஆகும். ரூ.1 லட்சத்துக்கும் மேல் பணித்தொகை வழங்கும்போது ஒப்பந்தப் பணிகளின் தன்மைக்கேற்ப வரி பிடித்தம் செய்ய வேண்டும்.
வரி பிடித்தம் செய்து செலுத்த வேண்டிய தனி நபரோ, நிறுவனமோ தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லையெனில், அவர்கள் பிடித்தம் செய்த வரியை அவர்கள் வசிக்கும் இடம் அல்லது வணிக தலைமையிடம் எந்தவொரு வணிக வரி சரக எல்லைக்குட்பட்டதோ அந்த சரக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், பிடித்தம் செய்யப்பட வேண்டிய வரித் தொகையுடன் 150 சதவீத தண்டமும் செலுத்த நேரிடும்.
சென்னை கோட்டத்தில் ஒப்பந்தப் பணிக்காக வரி பிடித்தம் செய்து செலுத்துவோர் கிரீம்ஸ் சாலை, வணிக வரி கட்டிடத்தில் அமைந்துள்ள மூலவரி செலுத்தும் சரக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பு முறை குறித்து தமிழ்நாடு வணிக வரித்துறையின் https://www.tnvat.gov.in என்ற இணையதளத்தில் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சந்தேகம் இருந்தால், cct@ctd.tn.gov.in என்ற மின்னஞ்சல் அல்லது 18001036751 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.