வேப்பனப்பள்ளி அருகே வி.மாதேப்பள்ளியில் நடந்த எருதுவிடும் விழாவில் சீறிப் பாய்ந்த காளைகள். 
தமிழகம்

கிருஷ்ணகிரியில் களைகட்டிய எருதுவிடும் திருவிழா: சாலைகளில் சீறிப்பாய்ந்த காளைகளை காண 3 மாநில மக்கள் திரண்டனர்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாராஜகடை சாலை, பழையபேட்டை, வி.மாதேப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று நடந்த எருதுவிடும் திருவிழாவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு கண்டுகளித்தனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மாலை 3 மணியளவில் காளைகளைக் குளிப்பாட்டி, வண்ணம் தீட்டி கொம்புகளில் அலங்காரத் தட்டிகளைக் கட்டி அங்காளம்மன் கோயில் முன்பு பூஜை செய்தனர். பின்னர் காளைகளை ஊர் தலைவர் மற்றும் இளைஞர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். தொடர்ந்து சாலையில் காளைகளை ஓட விட்டனர். எருதுவிடும் விழாவைக் காண ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டி ருந்தனர்.

பாதுகாப்புக்காக 2 பக்கமும் தடுப்புகள் எதுவும் அமைக்காத நிலையில், காளைகள் பல இடங்களில் கூட்டத்துக்குள் புகுந்தன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் காளைகளைப் பார்க்க நின்றிருந்தவர்கள் அச்சத்துக்குள்ளாகினர். இதேபோல் பழையபேட்டை மேல்தெருவில் நடந்த எருது விடும் விழாவில், 50-க்கும் மேற்பட்ட காளைகளை ஓட விட்டனர். இரண்டு இடங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எருது விடும் விழாவைக் காண திரண்டு வந்திருந்தனர். பாது காப்புக்கு போலீஸார் இல்லாத நிலையில், ஆங்காங்கே பார்வையாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி. மாதேப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதைக் காண தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வி.மாதேப்பள்ளியில் திரண்டனர். எருது விடும் விழாவில் காளைகள் முட்டியதில் பெண் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT