தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங் கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியா குமரி மாவட்டம் மயிலாடி, திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, விருதுநகரில் 6 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை, பாபநாசம், சிவகிரி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தேனி மாவட்டம் அரண் மனைபுதூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருவாரூர் மாவட்டம் குடவாசல், கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது. எனினும் அப்பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதற்கிடையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘சபாலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஏமன், ஓமன் ஆகிய அரபு நாடுகளின் கரையோரமாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மும்பையில் இருந்து 1,090 கி.மீ. தூரத்திலும், ஓமன் நாட்டின் சலாலா நகரில் இருந்து 1,140 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT