கந்தன்குடி உமா பசுபதீஸ்வர் கோயில் கோசாலையில் பசுக்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. 
தமிழகம்

காரைக்காலில் கோசாலைகளில் மாட்டுப் பொங்கல் விழா

அ.தமிழன்பன்

காரைக்கால் பகுதியில் உள்ள கோசாலைகளில் இன்று (ஜன.15) மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் அருகே கந்தன்குடியில் உள்ள உமா பசுபதீஸ்வர் கோயில் கோசாலையில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச பூஜை நடத்தப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மாலைகள் அணிவித்து, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் பசுக்கள் வீதியுலாவாக அழைத்து வரப்பட்டன.

அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க துணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் மகாராஜா சிவம், பாலாமணி சிவாச்சாரியார், சக்தி மணிகண்ட சிவாச்சாரியார், கார்த்திக் ராஜா சிவம், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தைச் சேர்ந்த கைலாசநாதர் கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று கோ பூஜை நடைபெற்றது. இவ்வாலயத்தின் பசுமடத்தில் உள்ள மாடுகள், கன்றுகளை ஆலய வளாகத்தில் சுந்தராம்பாள் சன்னதிக்கு அருகே கொண்டு வந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பொங்கல் வைத்துப் படையல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு அசனா, அறங்காவல் வாரியத் தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊழியப்பத்து பகுதியில் உள்ள, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோசாலையிலும், தர்பாரண்யேஸ்வரர் கோயில் பசுமடத்திலும் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT