தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதம்: அமைச்சர்கள் ஆய்வு

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள சேதங்களைத் தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலரும், திருநெல்வேலி மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகரக் காவல் ஆணையர் தீபக் தாமோர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

''மேற்குத்தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ராமநதி மற்றும் கடனாநதி ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன. வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழையினால் வெள்ளம் ஏற்படும். ஆனால், இந்த வருடம் ஜனவரி மாதம் யாரும் எதிர்பாராத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும், பொதுப்பணித் துறையினரும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

இம்மழையினால் எவ்வித பாதிப்போ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படாதவாறு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. கடந்த 2 நாட்களுக்கு முன் சேரன்மகாதேவி வட்டத்திற்கு உட்பட்ட வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தில் கோடகன் கால்வாய் அருகில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது, மழை வெள்ளத்தில் சிக்கிய ராமு (55), அவரது மகள் முத்துமாரி (25) மருமகன் அரவிந்த் (29), சுரேஷ் (7), பேபி (5) ஆகியோரை இரவு என்றும் பாராமல் அதிகாரிகள் குழுவினர் காப்பாற்றினர். சவாலான பணியினை மாவட்ட நிர்வாகம் மதிநுட்பத்தோடு மேற்கொண்டது.

பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும் மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிப்பதிலும் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பயிர் சேதங்கள், கால்நடை சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு 100 சதவீத நிவாரணங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்''.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

கூட்டத்தில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலரும், திருநெல்வேலி மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகரக் காவல் ஆணையர் தீபக் தாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாராயணன், எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''திருநெல்வேலி மாவட்டத்தில் அபாயகரமான சூழ்நிலை இல்லை. தாழ்வான பகுதிகளில் இருந்து மொத்தம் 284 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

அனைத்துக் குளங்களும் நிரம்பிவிட்டதால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. கடந்த நவம்பர், டிசம்பரில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிவர், புரெவி புயலால் 3.10 லட்சம் ஹெக்டேரில் பல்வேறு வகையான பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்காக ரூ.565.46 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதில் இதுவரை ரூ.487 கோடி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்படும் உறைகிணறுகள் உள்ளிட்டவை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT