தமாகா துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஞானதேசிகன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
ஸ்ரீவில்லிபூத்தூரைச் சேர்ந்த ஞானதேசிகன் (72) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இவருக்குத் திலகவதி என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அவரது மறைவையடுத்து வாசனுக்கு மிக விசுவாசமாக இருந்து வந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூப்பனாரின் தீவிர ஆதரவாளராகவும் திகழ்ந்த ஞானதேசிகன், மூப்பனாருக்குப் பின் ஜி.கே.வாசன் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது அதில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்தார். 2001-ம் ஆண்டும் அதன் பின்னர் 2007-ம் ஆண்டும் தொடர்ந்து 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகப் பதவி வகித்தார்.
பாதுகாப்பு, நிதி, உள்துறை, தொழிலாளர் நலம், ரசாயனம் மற்றும் உரம் ஆகிய துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமாகா மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது இவரும் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராகவும் ஞானதேசிகன் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
பின்னர் மீண்டும் ஜி.கே.வாசன் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமாகா ஆரம்பித்தபோது அவருடனே தமாகாவில் பயணத்தைத் தொடர்ந்தார். எளிமையாகவும், இனிமையான சுபாவமும் கொண்டு பழகக்கூடியவர் ஞானதேசிகன். அரசியலில் ஆழ்ந்த அறிவு உள்ளவர், ஊடகத்தினர், கட்சிக்காரர்களிடம் அன்பாகப் பழகக்கூடியவர், கட்சி வேறுபாடின்றி அனைவரிடமும் நட்புடன் பழகியவர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார்.
1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பிறந்த ஞானதேசிகன் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாட 5 நாட்களே உள்ள நிலையில், மாரடைப்பால் இன்று காலமானது அவரது குடும்பத்தாருக்கும், தமாகா கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.