தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 72 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 22.20 மி.மீ., செங்கோட்டையில் 13 மி.மீ., குண்டாறு அணை, சங்கரன்கோவிலில் தலா 11 மி.மீ., ராமநதி அணையில் 8 மி.மீ., தென்காசியில் 7.40 மி.மி., கருப்பாநதி அணையில் 7 மி.மீ., ஆய்க்குடியில் 5.30 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை ஆகிய 4 அணைகள் ஏற்கெனவே நிரம்பி உள்ளன. இதனால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இன்று காலையில் கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 1768 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 478 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 580 மி.மீ., குண்டாறு அணையில் இருந்து 11 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 90 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 90 கனஅடி நீர் வந்தது. 15 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கடையம் சொரிமுத்து பிள்ளை தெருவில் கூலித் தொழிலாளி துரை என்பவருடைய வீடு தொடர் மழையில் இடிந்து விழுந்தது. வீடு இடியத் தொடங்கியதும் உடனடியாக அனைவரும் வெளியே சென்றுவிட்டதால் காயமின்றி தப்பினர். தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்க வருகிற 17-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளத்தில் மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டது. சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தடுப்புக் கம்பியில் சுற்றிக்கொண்டு இருந்தது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.