தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 11 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டன.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு 6 வேளாண் பயிர்கள், 4 தோட்டக்கலைப் பயிர்கள், 1 வனப்பயிர் என 11 புதிய பயிர் ரகங்களை, அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் வெளியிட்டார்.
அதன் விவரம்:
கோ-54 நெல் ரகம்: தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய, 110-115 நாள் குறுகிய கால ரகம். ஹெக்டேருக்கு 6,400 கிலோ மகசூல் தரும், மத்திய சன்ன அரிசி ரகம்.
ஏ.டி.டீ. 55 நெல் ரகம்: கார், குறுவை மற்றும் கோடை பருவத்துக்கு ஏற்ற ரகம். 115 நாள் குறுகிய கால ரகம். ஹெக்டேருக்கு 6,000 கிலோ மகசூல் கொடுக்கும். பாக்டீரியா கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட சன்ன அரிசி ரகம்.
டி.ஆர்.ஒய்.- 4 நெல் ரகம்: களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்றது. 125-130 நாள் மத்திய கால ரகமாகும். சம்பா, தாளடி, பின் சம்பா பருவத்துக்கு ஏற்றது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. ஹெக்டேருக்கு 5,800 கிலோ விளைச்சல் கிடைக்கும்.
கேழ்வரகு ஏ.டி.எல்-1: இறவையில் ஹெக்டேருக்கு 3,130 கிலோவும், மானாவாரியில் 2,900 கிலோவும் விளைச்சல் தரவல்லது. 110 நாள் குறுகிய வயதைக் கொண்ட ரகம். குலை நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சாயாமல் முதிர்வடையும் தண்டு திறன், கதிரில் தானியங்கள் எளிதாகப் பிரியும் தன்மையால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது.
வரகு ஏ.டி.எல்-1: 110 நாட்கள் வயது கொண்ட வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட ரகம். ஹெக்டருக்கு 2,500 கிலோ தானியமாகவும், 4,400 கிலோ தட்டையாகவும் மகசூல் கொடுக்கும்.
உளுந்து கோ-7: இந்த ரகம் ஆடி, புரட்டாசி பட்டத்துக்கு ஏற்றது. 60 முதல் 65 நாளில் முதிர்ச்சி அடையும். ஹெக்டேருக்கு 880 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கும். மஞ்சள் தேமல் நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.
கத்தரி வி.எம்.ஆர். -2: இந்த ரகம் 140 நாள் வயதுடையது. காய்கள் அடர் ஊதா நிறத்துடன், அடிப்பகுதியில் பச்சைப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். காய் எடை 100 முதல் 150 கிராம் இருக்கும். செடியில் 2 முதல் 2.5 கிலோ எடை இருக்கும். ஹெக்டேருக்கு 50 டன் மகசூல் கிடைக்கும்.
பலா பி.எல்.ஆர்.-3: பாலில்லா பல ஆண்டு ரகமான இந்தப் பலா, ஜூலை முதல் டிசம்பர் வரை மகசூல் கொடுக்கும். ஒரு பழம் 5 கிலோ எடை இருக்கும். மரத்திற்கு 200 பழங்கள் வரை காய்க்கும். மிகக்குறைந்த பால் தன்மை இருக்கும். பழங்களில் அஸ்கார்பிக் அமிலம் கிராமுக்கு 4.35 மி.கி. என்ற அளவில் இருக்கும். சுளைகள் அதிக இனிப்புடன் இருக்கும்.
குடம்புள்ளி பி.பி.ஐ.(கு)-1: இது பல்லாண்டு பழப்பயிர். இது சமையலுக்கு ஏற்றது. காய்கள் புளிப்புத் தன்மையோடு இருக்கும். மரத்துக்கு சராசரியாக 750 பழங்கள் வீதம், 120 கிலோ மகசூல் கொடுக்கும். முதிர்ந்த பழத்தில் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் 20.67 சதவீதத்தில் இருக்கும். இந்த அமிலம் உடற்பருமனைக் குறைக்கும் தன்மை கொண்டது.
விளாம்பழம் டபிள்யூ எப்.எல்-3: பல்லாண்டு பழப்பயிர். ஒரு மரத்துக்கு, 140 கிலோ என்ற அளவில் மகசூல் கிடைக்கும். பழங்கள், பெரிய அளவில், 450 கிராம் எடையுடன் சிறந்த மணத்துடன், குறைவான புளிப்பு மற்றும் நல்ல இனிப்புடன் இருக்கும். புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் கொண்டது.
மலைவேம்பு எம்.டி.பி.-3: இது ஒரு வனப்பயிர். வேகமாக வளரும் இலையுதிர் கால மரம். 8 முதல் 10 ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். மரத்துக்கு 500 முதல் 700 கிலோ வீதம், ஹெக்டேருக்கு 50 முதல் 70 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். வேளாண் காடுகளில் ஊடுபயிராகப் பயிரிடலாம்.
மேற்கண்ட புதிய பயிர் ரகங்கள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.