தமிழகம்

அஞ்சல் துறைத் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

அஞ்சல் துறைக்கான தேர்வுப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதிருப்பது குறித்து கடந்த வாரம் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ் மொழியிலும் தேர்வு எழுதலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் பல்வேறு பணிகளை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முதல் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இரண்டாம் வினாத்தாள் மட்டுமே மாநில மொழிகளில் இருந்தது.

அஞ்சல் துறை தேர்வில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடந்து முடிந்த தபால் துறைத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. விரைவில் நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால் துறைத் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தி பேசாத மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட அட்டவணையில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கம் போல் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அஞ்சல் துறைத் தேர்வுகளுக்கான பட்டியல் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ் மொழி இல்லை என்கிற தகவல் வெளியானது. இது மத்திய அரசின் முந்தைய அரசாணைக்கு மாறாக உள்ளதாகப் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதி மீண்டும் தமிழை இணைக்க வலியுறுத்தினர்.

இந்நிலையில் பிப்.14 அன்று அஞ்சல் துறைத் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வை இந்தி ஆங்கிலம் அல்லாது தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT