திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. இதுகுறித்து வேளாண் துறையினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாலக்கரை எடத்தெரு பகுதியில் வீட்டின் மண்சுவர் இடிந்து இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. இதேபோல், அரியமங்கலம் குப்பைக் கிடங்கின் சுற்றுச்சுவர் ஜெகநாதபுரம் பகுதியில் இடிந்து விழுந்தது. மேலும், விஸ்வாஸ் நகரில் புதை சாக்கடைக்காகத் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் சேறும், சகதியாக இருந்த இடத்தில் கார் சிக்கிக் கொண்டு, கிரேன் வரவழைக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.
எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த ராமச்சந்திர நகரில் உள்ள சித்தி விநாயகர் நகர், அஞ்சலி நகர், கிருஷ்ணவேணி நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளைக் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழைநீர் சூழ்ந்துள்ளதாகவும், மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்துத் தண்ணீரை இறைத்து வருவதாகவும், ஆனால், தொடர் மழையால் மீண்டும் மீண்டும் மழைநீர் சூழ்ந்து கொள்வதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, சாலையோரம் மழைநீர் வடிவதற்கான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுமட்டுமின்றி, திருச்சி மாவட்டத்தில் பல ஏக்கரில் நெல் வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "திருச்சி மாவட்டத்தில் மணிகண்டம், லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, முசிறி உட்பட மாவட்டம் முழுவதும் பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவழித்துள்ள நிலையில், தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, முளைத்துவிட்டன. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நெல் உட்பட தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் 5,000 ஹெக்டேருக்கும் அதிகமான நெற்பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. நெல் மட்டுமின்றி வாழை, கரும்பு மற்றும் மானாவாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம் என மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிர்களின் கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு ஏற்கெனவே ஏக்கருக்கு ரூ.13,500, மானாவாரி பயிர்களுக்கு ரூ.7,400 இழப்பீடு கொடுத்த வந்த நிலையில், புரவி மற்றும் நிவர் புயல்களின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முறையே ரூ.20,000 மற்றும் ரூ.10,000 அளிக்கப்பட்டது. எனவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இந்த அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படவுள்ளது" என்றனர்.
மழை நிலவரம்
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக திருச்சி விமான நிலையத்தில் 30.10 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):
மணப்பாறை 29.20, பொன்மலை 24.80, தேவிமங்கலம் 23, நவலூர் குட்டப்பட்டு 20.40, புலிவலம் 19, திருச்சி ஜங்ஷன் 18, துவாக்குடி 16, முசிறி 15.40, பொன்னணியாறு அணை 13.60, சமயபுரம் 12.60, நந்தியாறு தலைப்பு 12.40, கோவில்பட்டி 11.20, திருச்சி நகரம் 11, லால்குடி 9.20, வாத்தலை அணைக்கட்டு 7.80.