தமிழகத்தில் பொங்கல் திருநாள் களைகட்டியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று ஜவுளிக் கடைகளில் இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பேருந்து, ரயில்கள் மூலமாக சென்னையில் இருந்து கடந்த 3 நாட் களில் 7 லட்சம் பேர் சொந்த ஊர் களுக்கு புறப்பட்டு சென்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த கோடிக்கணக்கான மக்கள், அரசு படிப்படியாக வழங்கி வரும் தளர்வு காரணமாக மீண்டெழுந்து வருகின்றனர். இதனால் கடந்த தீபாவளி பண்டிகையை விட, பொங்கல் திருநாளை உற்சாகமாக வரவேற்க தயாராகியுள்ளனர்.
இறுதிக்கட்ட விற்பனை
சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதலே பொதுமக்கள் குடும் பத்துடன் ஜவுளிக்கடைகளில் குவிந்து வந்தனர். புத்தாடைகள் மற்றும் பொங் கல் கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு பொங்கல் திருநாள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருவ தால், சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாட புறப்பட்டனர்.
பொங்கல் முதல் நாளான நேற்று காலையும் சென்னையில் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், புரசைவாக்கம், பழைய வண்ணாரப் பேட்டை, புறநகர் பகுதிகளான போரூர், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். பின்னர் மாலையில் பேருந்து, ரயில்களில் சொந்த ஊர் களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை மட்டுமில்லாது திருச்சி, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட மாநகரங்களிலிலும் நேற்று ஜவுளி கடைகளில் மக்கள் குவிந்தனர். அதனால் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் உற்சாகம் களைகட்டியது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தாலும், அதை பொருட்படுத்தாது கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் காய்கறி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் குவிந்தது. பொங்கல் திருநாள் படையலுக்கு காய்கறிகள், கரும்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் நேற்றே வாங்கிச் சென்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்து களோடு, 1,952 சிறப்பு பேருந்துகளும் கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்கெனவே அறிவித்தபடி கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூரிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில்களிலும் நேற்று கூட்டம் அதிக மாக இருந்தது.
7 லட்சம் பேர்
கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 3 நாட்களில், அரசுப் பேருந்து களில் 5 லட்சம் பேர், தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக தலா 1 லட்சம் பேர் என மொத்தம் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென் றுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்து, சென்னை போன்ற நகரங் களுக்கு மக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் 15,270 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தலைவர்கள் வருகை
சென்னையில் இன்று நடக்கும் பொங்கல் விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை வரும் அவர், மதுரவாயலில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடக்கும் 'நம்ம ஊரு பொங்கல்' விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் ‘துக்ளக்’ வார இதழின் 51-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
இதேபோல் மதுரை அவனியா புரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வரும் அவர், அங்கிருந்து காரில் அவனியாபுரம் செல்கிறார். பார்வையாளர் மாடத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார்.
இதுதவிர 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இன்று காலை 7.30 மணிக்கு சென்னை மூலக்கடை அருகே பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள கடம்பாடியம்மன் கோயில் வளாகத்தில் நடக்கும் பொங் கல் விழாவில் பங்கேற்கிறார்.
இந்த ஆண்டு பொங்கல் திருநாளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு போட்டிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக் கிறது. இதில் பங்கேற்க 788 காளை களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட் டுள்ளன. 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கியுள்ளனர். போட்டி நேரம் குறைக்கப்பட்டதோடு கட்டுப்பாடுகள் அதிகரிப்பால், அனைத்து காளை களையும் வாடிவாசலில் களம் இறக்கு வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாளை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நாளை மறுநாள் (16-ம் தேதி) நடக்கிறது. இதை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.