தமிழகம்

900 கலைஞர்களை உருவாக்கிய திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளி

இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி இதுவரை சுமார் 900 கலைஞர்களை உருவாக்கியுள்ளது.

பாரம்பரிய கலைகளை பாதுகாக்க மாவட்டம் தோறும் இசைப்பள்ளியை தமிழக அரசு தொடங்கியது. கலைப் பண்பாட்டு துறை கட்டுப்பாட்டில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை பவளக்குன்று மடாலயம் தெருவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது.

நாதசுரம், தவில், குரலிசை, தேவாரம், பரதநாட்டியம் ஆகிய 5 துறைகளுடன் தொடங்கப்பட்ட தி.மலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில், 2010-ம் ஆண்டு முதல் வயலின், மிருதங்கம் ஆகிய 2 புதிய துறைகள் இணைக்கப்பட்டுள்ளது. 7 துறைகளுடன் நடைபெற்று வரும் அரசு இசைப்பள்ளி, கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 900 இசைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளது.

தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் நாதஸ்வர ஆசிரியர் ரவிசங்கர், குரலிசை ஆசிரியர் காசி விஸ்வேஸ்வரன் ஆகியோர் கூறுகையில், “எங்கள் இசைப்பள்ளியில் தவில் மற்றும் நாதசுரம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதிகம். 3 ஆண்டு படிப்பு முடிந்ததும், கோயில், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதேபோன்றதொரு வாய்ப்பு தேவாரம், வயலின் மற்றும் மிருதங்கத்துக்கும் உள்ளது. சைவம் மற்றும் வைணவ ஆலயங்களில் தேவாரம் பாடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

தமிழ் முறைப்படி திருமணங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. அதற்கு தேவாரம் பாட தெரிந்திருக்க வேண்டும். வயலின், மிருதங்கம் ஆகியவை துணை இசைக்கருவியாக இருப்பதால், எதிர்காலத்தில் தேவை உள்ளது. வீணை, புல்லாங்குழல், பாட்டு, இசைக்கு வயலின், மிருதங்கம்தான் துணை இசைக்கருவி. பக்தி பாடல்கள் ஒலிப்பதிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் வாய்ப்புள்ளது. மூன்றாண்டு படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு படிக்கலாம். முனைவர் பட்டம் வரை படித்து, தங்கள் திறமையை வளர்த்து கொள்ளலாம்” என்றனர்.

மாணவர் சேர்க்கை

தி.மலை அரசு இசைப்பள்ளி யில் 7 துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள இருபாலரும் சேரலாம். கல்வித் தகுதி 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில், தேவாரம் துறைகளுக்கு எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள். 3-ம் ஆண்டு முடிவில் அரசு தேர்வு துறை மூலமாக தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சிறப்பு கட்டணமாக மூன்றாண்டுகளுக்கு தலா ரூ.120 செலுத்த வேண்டும். அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.400, இலவச பேருந்து சலுகை, விலையில்லா பாட புத்தகம், விலையில்லா சீருடை, காலணிகள், மிதிவண்டி ஆகியவை வழங்கப்படு கின்றன.

SCROLL FOR NEXT