தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம்தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு செய்து, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. அப்போது தேர்தல் செலவினம் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், ‘‘தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த செலவுத்தொகையாக ரூ.621 கோடியை வழங்க தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வகையில், தற்போதுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் 95ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.
இதற்கான செலவினங்கள், தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களுக்கான செலவினங்கள் ஆகியவை அதிகரிக்கும் என்பதால் மேலும் செலவுத்தொகை அதிகாரிக்கும். மேலும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், தமிழகத்தில் தற்போதைய கரோனா வைரஸ் நிலவரம், பிஹார் மாநிலத்தை பின்பற்றி கரோனா பரவல் காலத்தில் தேர்தல் நடத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்தும் முதல் கட்டமாகஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக விரைவில் ஆலோசனை நடைபெறும்.
இறுதிவாக்களர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. திட்டமிட்டபடி வரும் 20-ம் தேதி பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.