கோவை சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன். 
தமிழகம்

பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட எஸ்.சி. சமூகத்தவருக்கு வாய்ப்பு: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்

செய்திப்பிரிவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுத் தொகுதிகளிலும் போட்டி யிட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 5-ம் கட்டப் பிரச்சாரத்தைக் கோவை யில் நிறைவு செய்துள்ளேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் பேரெழுச்சியைக் காண முடிந்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. நடுநிலையுடன் செயல்படுவதுதான் மக்கள் நீதி மய்யத்தின் கோட்பாடு. பொதுத் தொகுதிகளிலும், தகுதி, நேர்மையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும். இந்த தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, மக்களை சந்திப்பேன்.

தொழில் துறை மேம்பாட்டுக்காக 7 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளேன். தொழில் துறை புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான அமைச்சகம் உருவாக்கப்படும். அறிவியல், தொழில்நுட்பம், புதிய தொழில்களுக்கு முனைதல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்கி நான்காம் தொழிற்புரட்சிக்கு இத்துறை அடித்தளம் அமைக்கும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு முயற்சியால் பணப் புழக்கம் அதிகரிப்பது உறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்றார்.

சுந்தராபுரத்தில் பிரச்சாரம்

முன்னதாக, சுந்தராபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தபோது கமல்ஹாசன் பேசியதாவது:

நாளை நமதே என்று சொல்லும் கட்டை விரல்கள் எங்கு பார்த்தாலும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றன. ‘எங்களை எல்லோரும் கூடி வேடிக்கைதான் பார்க்கின்றனர். இதெல்லாம் வாக்காக மாறாது’ என்று சிலர் கூறுகின்றனர்.

அதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? நாங்கள் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் இல்லை என்பதை, இன்னும் 3 மாதங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கு நீங்கள் தயாராகி விட்டதாகவே நினைக்கிறேன். இது நடந்தால் நாம் அடைய வேண்டிய இலக்கை அடையலாம். நிச்சயம் நாளை நமதாகும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அதைத்தொடர்ந்து மதுக்கரை பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், இரவு விமானம் மூலமாகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

SCROLL FOR NEXT