தமிழகம்

கோழி இறைச்சியை நன்கு வேகவைக்க வேண்டும்; பச்சை முட்டை, ஆஃப்பாயில் சாப்பிட வேண்டாம்: கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தகவல்

செய்திப்பிரிவு

பறவைக் காய்ச்சல் இருப்பதால் கோழி, வாத்து இறைச்சிகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சை முட்டை, ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மைய

இயக்குநர் இயக்குநர் ஜி.தினகரராஜ் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது எனநிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கோழி, வாத்து மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குநர் ஜி.தினகரராஜ் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் கோழி, வாத்து மற்றும் பறவைகளுக்கு மட்டுமே பரவியுள்ளது. இன்னும் மனிதர்களுக்கு பரவியதாகத் தகவல் இல்லை. தமிழகத்தில் இன்னும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை. ஆனாலும், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கோழி, வாத்து இறைச்சிகள் மற்றும் அதன் முட்டைகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். 70 டிகிரியில் அதிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும். இந்த பிரச்சினை முடியும் வரை பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் போன்றவைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சேவல் சண்டை நடக்கும் இடங்களில் சேவல் இறந்தாலோ, வெளிநாட்டுப் பறவைகள் இறந்து கிடப்பதை பார்த்தாலோ உடனே அருகில் உள்ள கால்நடை மருத்துவ மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கோழி, வாத்து பண்ணைகளின் உரிமையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT