சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பிய 40 வயதுடைய நபர் மீது அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் வைத்திருந்த சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது, அதில் ரகசிய அறைகள் இருந்தன. அந்த அறைகளில் தலா 500 கிராம் எடையுள்ள 4 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து நேற்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்த பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கோட் அணிந்து வந்த ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த கோட்டில் தலா 100 கிராம் எடை கொண்ட 15 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பிடிபட்டவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஜினி (24) என தெரியவந்தது. இதையடுத்து 1.5 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், ரஜினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து சில மணி நேரங் களில் 3.5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.