தமிழகம்

தமிழ்நாட்டின் வலுவான சுகாதார கட்டமைப்பே கரோனா பரவல் குறைவதற்கு காரணம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்

ஜெ.ஞானசேகர்

தமிழ்நாட்டில் உள்ள வலுவான சுகாதாரக் கட்டமைப்பே கரோனா பரவல் குறைவதற்கு காரணம் என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அரசின் அறிவிப்பின்படி கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவத் துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு ஜன.16-ம் தேதி கரோனா தடுப்பூசி இடப்படவுள்ளது.

இந்தநிலையில், திருச்சி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மண்டல தடுப்பூசி மையத்துக்கு இன்று அதிகாலை கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றன. அவற்றைப் பிற மாவட்டங்களுக்கு மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கொடியசைத்து அனுப்பிவைத்தார். அப்போது, மாநில சுற்றுலா துறை அமைச்சர் என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் சுகாதாரத் துறையினர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகளை இட்டுக் கொள்வதில் எவ்வித பயமோ, பதற்றமோ, தயக்கமோ தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக நேற்று வரப்பெற்ற 5,36,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னையில் இருந்து உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சியில் உள்ள மண்டல தடுப்பூசி மையத்துக்கு இன்று வரப் பெற்ற 68,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள், திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 9 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை அந்தந்த சுகாதார மாவட்டங்களில் குளிர்ப்பதன கிடங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டு, ஜன.16-ம் தேதி கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கு இடப்படவுள்ளது. ஒரு குப்பியில் 5 எம்எல் வீதம் தடுப்பூசி மருந்து இருக்கும். ஒருவருக்கு 0.5 எம்எல் வீதம் தடுப்பூசி மருந்து இடப்படும். இவ்வாறு தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஜன.16-ம் தேதி முன்களப் பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு, மொத்தம் 307 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட தடுப்பூசி இட்டவுடன் பாதிப்பு நேரிடாது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஏனெனில், முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டதில் இருந்து 28 நாட்களுக்குப் பிறகு 2-வது முறையாக மீண்டும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, 14 நாட்களுக்குப் பிறகுதான் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இதன்படி, தடுப்பூசிகளை 2 முறையும் தவறாமல் எடுத்துக் கொண்டால், 42-வது நாளுக்குப் பிறகுதான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதை மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் காலத்தில் மது அருந்தக் கூடாது.

கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரக் கூடாது. தவறான தகவல்களைப் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனை முகாம் என அரசின் தொடர் நடவடிக்கைகளால் கரோனாவால் பாதிக்கட்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் 10 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு விகிதம் கடந்த வாரத்தில் 1.4 சதவீதமாக இருந்து, தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, பிற மாநிலங்களில் 3 சதவீதமாக உள்ளது. இந்த நிலையை அடைவது அவ்வளவு சுலபமில்லை. தமிழ்நாட்டில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருந்ததாலேயே இது சாத்தியமாயிற்று. இதனால், பல்வேறு உலக நாடுகள் தமிழ்நாட்டைக் கண்டு வியந்துள்ளன.

வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு இ-பாஸ் அவசியம் என்ற நிபந்தனையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமல்படுத்திய காரணத்தால், அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பிய அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, காரோனா பாதிப்பு இருந்த நான்கு பேரை கண்டறிய முடிந்தது. அரசின் அறிவிப்புக்கிணங்க ஒவ்வொரு கட்டங்களாக கரோனா தடுப்பூசி இடப்படும் என்றார்.

SCROLL FOR NEXT