கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கீழக்கரை கிராமத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் சாய்ந்துள்ளன. 
தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம்

செய்திப்பிரிவு

அடுத்தடுத்த 2 புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில், தற்போது பெய்துவரும் தொடர் மழையால் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. சாய்ந்த நெற்பயிர்களின் இடையே, மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பல இடங்களில் அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டும் தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

மரங்கள் முறிந்தன

குமராட்சி அருகே உள்ள நளன்புத்தூர் கிராமத்தில் நேற்று மழையுடன் பலத்த காற்று வீசியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சில வீடுகளில் ஓடுகள் பறந்து விழந்தன.

இதற்கிடையே கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியின் வடிகால் மதகுகளான விஎன்எஸ்எஸ்ல் விநாடிக்கு ஆயிரம் கனஅடியும், வெள்ளியங்கால் ஓடை வடிகால் மதகில் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால், பழைய கொள்ளிடம் மற்றும் மணவாய்க்காலில் ஆகியவற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது.

“அனைத்து வாய்க்கால்களிலும் அதிக அளவில் மழை தண்ணீர் செல்வதால் வயலில் இருந்து தண்ணீரை வடியவைக்க முடியவில்லை. தொடர்து வயலில் தண்ணீர் நின்றால் நெல் முளைத்துவிடும்.

கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் இப்படி ஏற்பட்டிருக்கிறது’‘ என்று குமராட்சி பகுதி விவசாயிகள் வருத்தத்துடன் கூறினர்.

SCROLL FOR NEXT