தமிழகம்

காணும் பொங்கலன்று கூட்டம் சேருவதை தடுக்க மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் ஆலோசனை

செய்திப்பிரிவு

தைப் பொங்கல் திருநாள் 4 நாள் பண்டிகையாக இன்றுமுதல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

வழக்கமாக, இந்த நாளில் சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு குதூகலமாக பொழுதை கழிப்பார்கள். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. அதேபோல, வரும் 16-ம் தேதி காணும் பொங்கல் அன்றும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று ஆலோசனை நடத்தினார்.

காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாதபடி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலி அமைப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. புத்தாண்டு போலவே மெரினா கடற்கரையை சீல் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT