வீடு கட்டுமான நிறுவனங்கள் வீட்டின் விலையைக் குறைத்து நிர்ணயிப்பதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தென்னிந்திய சிமென்ட் உற்பத்தியாளர் சங்கம் (எஸ்ஐசிஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் என்.னிவாசன் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் ஆத்மநிர்பர் திட்டத்துக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது சிமென்ட் தொழிற்சாலைகள்தான். ஆண்டுக்கு 50 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 7 கோடி டன் உற்பத்தி செய்யப்படும் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் சிமென்ட் துறையின் பங்களிப்பு கணிசமானது. சிமென்ட் உற்பத்தியில் 60 சதவீத அளவுக்கே கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
சிமென்ட் நுகர்வு அதிகரிக்காததற்கு, வீடுகளின் விலையை மிக அதிகமாக கட்டுமான நிறுவனங்கள் நிர்ணயிப்பதே காரணமாகும். ஆனால், அவை பெரும்பாலும் சிமென்ட் விலையேற்றத்தைக் காரணமாகக் கூறுகின்றன. உண்மையில் வீட்டின் விலையில் சிமென்டின் பங்கு சுமார் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரைதான் உள்ளது.
குறிப்பாக சென்னையில் வீட்டுமனை ரூ.10 ஆயிரம் விலையில் உள்ளது. இதில் கட்டப்படும் வீடுகளில் ஒரு சதுர அடி விலை ரூ.4,200 வரையாகும். கட்டுமான விலை சேர்த்தால் ஒரு சதுர அடி ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை அதிகரிக்கும். ஆனால் கட்டுமான நிறுவனங்கள் சதுர அடி விலையை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நிர்ணயிக்கின்றன. இதனால் வீடுகளின் விலை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கட்டுமான நிறுவனங்களின் கூட்டு மிக வலுவாக உள்ளதால், அவர்கள் நிர்ணயிக்கும் விலைதான் இறுதியாக உள்ளது. 9 பெரு நகரங்களில் மொத்தம் 75 லட்சம் வீடுகள் பாதிகட்டி முடிக்கப்பட்டு முடிவடையாமல் உள்ளன. இதனால் வீடு வாங்குவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளின் விலையை கட்டுமான நிறுவனங்கள் குறைத்தால் மட்டுமே இவை அனைத்தும் விற்பனையாக வழியேற்படும். நடுத்தர மக்களுக்கு சொந்த வீடும் சாத்தியமாகும்.
ஆனால், கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டுவதற்கான மூலப்பொருள் விலை உயர்வைக் காரணம் காட்டுகின்றன. சிமென்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.100 உயர்ந்தால் கூட அது ஒரு சதுர அடி கட்டுமான விலையில் ரூ.50-தான் உயரும்.
இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு கட்டுமான நிறுவனங்களின் கூட்டு விலை நிர்ணய முறையை உடைக்க வேண்டும். இவ்விதம் நடவடிக்கை எடுத்தால் வீட்டின் விலை 50 சதவீதம் வரை குறையும். அத்துடன் வீடுகளுக்கான விலையை முழுவதும் காசோலை மூலமாகவே பரிவர்த்தனை செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.