திருச்சி மாவட்டம் சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டிலும் மாட்டுப் பொங்கல் அன்று (ஜன.15) கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, உரிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த மாதம் 15-ம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொடர்ந்து, சூரியூரில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாடிவாசல், மேடை, இரண்டடுக்கு தடுப்பு அமைத்தல், பார்வையாளர் மாடம், காளைகள் காத்திருக்கும் வரிசை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. இவற்றை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) த.செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, அரசிடமிருந்து இதுவரை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால், திட்டமிட்டபடி சூரியூரில் நாளை மறுதினம் (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அனுமதி கிடைக்காததால், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சூரியூர் கிராம மக்கள் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு ஒரு மாதத்துக்கு முன்பே மனு கொடுத்துவிட்டோம். தேவையான ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். இந்நிலையில் அரசிடமிருந்து முதற்கட்டமாக வெளியிடப்பட்ட அரசாணையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசாணையில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருப்பூர், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள சில கிராமங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தின் பெயர்கூட இடம்பெறவில்லை. எங்கள் ஊருக்கும் இதுவரை அனுமதிக்க அளிக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் 2 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதால் அதற்குள் அனுமதி கிடைத்துவிடுமா எனத் தெரியவில்லை.
எனினும், நிச்சயம் அனுமதி பெற்றுத் தருவதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் ஆகியோர் உறுதியளித்துள்ளனர். அதை நம்பி, ஜல்லிக்கட்டுக்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம்'’ என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘சூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறைகளிடமிருந்து தடையில்லா சான்றுகள், காப்பீட்டு படிவம் போன்றவற்றை பெற வேண்டி இருந்தது. அவற்றைப் பெற்று, ஒருங்கிணைத்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் இன்று (ஜன.13) நிச்சயம் அரசாணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்'’ என்றனர்.