காட்டாம்பூண்டி கிராமத்தில் பொங்கல் பரிசு வழங்கிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. 
தமிழகம்

ஊழல் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்

செய்திப்பிரிவு

ஊழல் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். கிராம மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். அடுத்தாண்டு வரக்கூடிய பொங்கல், நமக்கெல்லாம் சிறப்பான பொங்கலாக இருக்கும். ஏனெனில், அப்போது தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பார். அதன்மூலம் தமிழர்களின் தலைவிதி மாறியிருக்கும். தமிழர்கள் இல்லங் களில் மகிழ்ச்சி பொங்கும்.

பச்சை துண்டு கட்டிக்கொண்டு, நானும் விவசாயி என ஏமாற்றி வருகிறார் முதல்வர் பழனிசாமி. அவர், விவசாயிகளுக்கு செய்தது என்ன? பச்சை துரோகம் மட்டும்தான். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடிய நிலைமை உள்ளது. அதற்கு காரணமான உதய் மின் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, முதல்வர் பழனிசாமி ஆதரித்துள்ளார். மேலும், மோடி அரசாங்கம் கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும் ஆதரித்துள்ளார். இதனால், உணவு பதுக்கல், விலைவாசி உயர்வு மற்றும் பட்டினி சாவு ஏற்படும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் வீடு கட்ட 3 சென்ட் இடம், இலவச செல்போன், முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் மற்றும் ஆடு, மாடு, கோழி வழங்கப்படும் என அறிவித்தார்கள். எதையாவது கொடுத்தார்களா?. கொடுக்கவில்லை. ஊழல் செய்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அயராது பாடுபட்டால்தான், ஆட்சி பொறுப்புக்கு திமுக வரும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT