அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ரமேஷ்மகாதேவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பல்வேறு துறைகளில் பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 24.12.2020-ல் இடமாறுதல் செய்யப்பட்டனர். பொதுத்துறை இணை இயக்குனராக பணிபுரிந்த ரமணசரஸ்வதி, அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அறநிலையத்துறை சட்டப்படி அறநிலையத்துறை இணை ஆணையராக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கூடுதல் ஆணையராக நியமிக்க வேண்டும். தற்போது கூடுதல் ஆணையர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதம்.
அரசு சட்டவிதிமுறைகளை மீறி தனிநபர் ஒருவருக்காக ஒரு பதவியை ஏற்படுத்தி இருப்பதை ஏற்க முடியாது. எனவே அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க சட்டத்தில் இடமுள்ள.
எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.