தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் இன்று பாறைகள்  உருண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தமிழகம்

போடி மெட்டு மலைச்சாலையில் பாறை சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

என்.கணேஷ்ராஜ்

தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் இன்று காலையில் பாறைகள் சரிந்தன. இதனால் தமிழக-கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடியிலிருந்து 26 கி.மீ. தூரம் நீளம் கொண்ட இந்த மலைச்சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.

இந்த மலைச்சாலையில் தினமும் தோட்ட தொழிலாளர்கள் செல்லும் ஜீப்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக போடிமெட்டு மலைச்சாலையில் தொடர்ந்து சாரல் மழை வருகிறது.

இந்நிலையில் 4வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் இன்று காலை மண்ணின்பிடிப்புத்தன்மை குறைந்து திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. சாலையின் மையப்பகுதியில் இவை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடிமெட்டு மற்றும் முந்தல் சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஒரு மணி நேரமாக நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகளை அகற்றி சாலையை சீரமைத்தனர். இதன்பின்பு போக்குவரத்து சீராகியது.

SCROLL FOR NEXT