கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களுக்கு ஏற்படும் அச்சத்தைப் போக்கி நம்பிக்கை ஏற்படுத்த, முன்னுதாரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், அமைச்சர்களுக்கு முதற்கட்டத்திலேயே தடுப்பூசி போடுமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத உள்ளதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளோம்.
பிரதமருடன் நடைபெற்ற முதல்வர்கள் கூட்டத்தில் மேற்கு வங்க மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் தடுப்பூசிக்கு என்ன உத்தரவாதம் உள்ளது- பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாதா எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கு, "அவசரக் காலம் என்பதால் மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர். பரிட்சார்த்த முறையில் சோதனை செய்யப்பட்டதால் அனுமதி தரப்பட்டது" என்று பிரதமர் கூறினார்.
முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாகக் காவல்துறை, துப்புரவுப் பணியாளர்களுக்கும், மூன்றாவது கட்டத்தில் 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கும், 4-வது கட்டமாக அனைத்துத் தரப்பினருக்கும் போடப்படும் எனப் பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அரசு இலவசமாகக் கரோனா தடுப்பூசியை அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசு முழுமையாகச் செலவை ஏற்றுக்கொண்டு புதுச்சேரி மாநில அரசின் நிதியிலிருந்து மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும்.
மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்க வேண்டும், அச்சம் இருக்கக் கூடாது. மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்துச் சந்தேகம் உள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முந்திக்கொள்ளக் கூடாது என பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் கட்டமாகத் தடுப்பூசியைப் போட்டு முன்னுதாரணமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுத உள்ளேன்.''
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.