பொங்கல் திருநாள் நாளை மறுநாள் (ஜன. 14) கொண்டாடப்படவுள்ள நிலையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் பொங்கல் பொருட்கள் விற்பனை இன்று மந்தமாக காணப்பட்டது.
பொங்கல் விற்பனை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம்.
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தார்:
ஆத்தூர், குரும்பூர், சேரன்மகாதேவி, சத்தியமங்கலம், தேனி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் தூத்துக்குடி காமராஜ் காய்கறி மொத்தச் சந்தைக்கு விற்பனைக்காக வந்துள்ளன.
நேற்று ஒரே நாளில் சுமார் 210 டன் வாழைத்தார்கள் இங்கு விற்பனைக்கு வந்தன. வழக்கமாக 500 டன் வரை வாழைத்தார்கள் வரும். ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக தோட்டங்களில் வாழைத்தார்களை வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக வியாபாரமும் மந்தமாகவே உள்ளது.
இருப்பினும் வரத்து குறைவு காரணமாக விலை ஓரளவுக்கு நன்றாக உள்ளது. நாட்டு வாழைத்தார் ரூ.400 முதல் 450, கற்பூரவல்லி ரூ.450, சக்கை ரூ. 250 முதல் 300, கதலி ரூ. 300, கோழிக்கூடு ரூ.600, செவ்வாழை ரூ.700, பூலாச்சுண்டான் 600, ஏத்தன் ரூ.300-க்கு இன்று விற்பனை செய்யப்பட்டன.