தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ரஜினி ஆதரவு அளிக்க மாட்டார்: தமிழருவி மணியன் கருத்து

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க மாட்டார் என்று நம்புவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ரஜினியுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்.எனவே, அரசியலுக்கு வருமாறு அவரை ரசிகர்கள் இனியும் நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உடல்நலம் சார்ந்து அவர் எடுத்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும். ரஜினி எந்த அழுத்தத்துக்கும் ஆட்படக்கூடியவர் அல்ல. ரசிகர்கள் தன்னெழுச்சியாகவே திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு முடிவு கட்டவே ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகள் ரஜினியுடன் தொடர்ந்து நட்பாக இருந்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியவன் என்ற முறையில் அவரை நன்கு அறிவேன். 1996 போல, வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ரஜினி ஆதரவு அளிக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.

நடைமுறை அரசியலுக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. அதேநேரம், காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இயக்கத்தை வலிமைப்படுத்தி மக்கள்நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைவராக நீடிப்பு

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன்தொடர்வார் என்று அதன் பொதுச்செயலாளர் குமரய்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT