அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் ஃப்ளக்ஸ் போர்டு வைக்கத் தடை விதித்தும், விழாக்குழுவினர் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அன்பரசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாக்குழுவுக்கு ஏ.கே.கண்ணன் தலைமையில் குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழாக்குழு அமைப்பது தொடர்பான அமைதிக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு குழுவுக்கு கண்ணனை தலைவராக்க பெரும்பாலானோர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அமைதிக் கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
இதனிடையே அமைதிக்கூட்டத்தில் அனைவரும் ஆதரவு தெரிவித்தாகக் கூறி கண்ணன் தலைமையில் குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கண்ணன் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழு தலைவராக இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைதியாக நடைபெற்று வருகிறது.
மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பட்டியல் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவுக்கு ஏ.கே.கண்ணன் தலைமையில் விழாக்குழு அமைத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விழாக்குழுவை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடுகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு போல விழாக்குழுவில் முதல் மரியாதை வழங்ககவும், சாதி ரீதியாக, அரசியல் ரீதியாக ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை விதிக்க வேண்டும். ஜல்லிக்கட்ட கணக்கு வழக்குகளைப் பராமரிக்க தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றனர்.
இவற்றை ஏற்றக்கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விளையாட்டை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் இந்தாண்டும் பொருந்தும்.
மனுதாரர் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள 3 கோரிக்கைகளையும் விழாக்குழு பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
இதேபோல் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கக் கோரி தாக்கலான மனுவும் விசாரணைக்கு வந்தது. கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்திருப்பதால் ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.