கம்பம் பகுதியில் முதல்போக சாகுபடி முடிந்தநிலையில் வயல்களில் சிதறிய நெல்மணிகள் வாத்துக்களுக்கு இரையாக அமைந்துள்ளது. இதற்காக வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. லோயர்கேம்ப்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை இந்த விளைநிலங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இதற்காக மே இறுதியில் இப்பகுதி விவசாயிகள் நாற்றுப்பாவு செய்து முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பிற்காக காத்திருப்பர். இதனைத் தொடர்ந்து ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை குறைந்தது 90 நாட்கள் 400 கனஅடி வீதம் நீர் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் துவங்கவில்லை. இதனால் நீர் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது முதல்போக சாகுபடி கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முடிவடைந்துள்ளது. நெற்பயிரை அறுவடை செய்து மீதமுள்ள வைக்கோல் இயந்திரம் மூலம் கட்டப்பட்டு வெளியூர் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது விளைநிலங்களை அடுத்தகட்ட விவசாயத்திற்காக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வயல்களில் நீர் தேக்கி உழுவதற்கு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே சாகுபடி செய்த நெல்மணிகள் வயலுக்குள் சிதறிக் கிடப்பதால் வாத்துக்களுக்கான உணவுகள் இப்பகுதியில் அதிகம் கிடைக்கிறது. எனவே சோழவந்தான், தஞ்சாவூர், மேலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாத்து மேய்ச்சலுக்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துள்ளனர்.
தனித்தனியாக இவர்கள் முகாமிட்டு வயல்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காலையில் 6 மணிக்கு ஒவ்வொரு வயல்களாக வாத்துக்களை அழைத்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதுகுறித்து சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் பகுதியைச் சேர்ந்த ஆண்டி என்பவர் கூறுகையில், தற்போது வாத்துக்கள் முட்டையிடும் பருவத்தில் உள்ளன.
இந்நிலை யில் வயல்களில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகள், புழு, பூச்சி போன்றவை இவற்றிற்கு சத்தான உணவாக அமைகின்றன. இதற்காக விவசாய சங்கங்களுக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்து விடுவோம். தினமும் ஒவ்வொரு வயலாக பல கி.மீ.தூரம் சென்று மேய்ச்சல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். சிதறிய நெல்கள் அடுத்த சாகுபடியின் போது களையாக வளரும் என்பதால் விவசாயிகளுக்கும் வாத்து மேய்ச்சல் பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது. எங்களைப் போன்ற பலரும் குடும்பம் குடும்பமாக இப்பகுதிக்கு வந்துள்ளனர்.
சுமார் 20 ஆயிரம் வாத்துக்களுக்கு மேல் தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மேய்ச்சலில் உள்ளன. தஞ்சாவூர், கேரளா, மைசூர் போன்ற பகுதிகளுக்கும் விளைச்சல் மற்றும் பருவ நிலையைப் பொறுத்து இடம்பெயர்ந்து கொண்டே இருப்போம். குஞ்சுகளை ரூ.25-க்கு வாங்கி வளர்ப்போம். இரண்டரை வயதானதும் ரூ.250-க்கு விலைபோகும். 5 ஆண்டுகள் ஆயுள் என்றாலும் அதற்கு முன்பாகவே இறைச்சிக்கு விற்று விடுவோம். முட்டைகளையும், வாத்துக்களையும் வியாபாரிகளே எங்களிடம் வந்து வாங்கிக் கொள்கின்றனர் என்றார்.